நாவல் பகுதி: எலி என்னும் பெயர் கொண்ட பூனை
ஐமீல் ஹத்மலிடம் ஒரு விசித்திரமான பழக்கமிருந்தது, அவன் கண்ணாடி முன்
அமர்ந்தபடி தன் பிம்பத்தின் முன்பாகப் பகடையை உருட்டி
சூதாடிக்கொண்டிருப்பான். சில வேளைகளில் அவனுடன் சூதாடுவதற்கு வரும் உமர்
கேட்டதுண்டு
“ஜமீல் உன்னோடு நீயே ஏன் சூதாடுகிறாய்.”
“ஒருவனுக்குத் தன்னைத் தவிர வேறு ஏமாற்றாத துணை ஏதிருக்கக்கூடும்.”
“தன்னை ஆராதிப்பவர்களைக் கண்டிருக்கிறேன், இது என்ன பழக்கம், தன்னைத் தானே பழிவாங்கிக் கொள்வதா?”
“உமர், இது சிறு வயது பழக்கம். கண்ணாடி பார்க்கத் தொடங்கிய முதல் நாளை நீ
மறந்திருப்பாய், என்னால் அந்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியவில்லை, நான்
இப்படித்தானிருப்பேன் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அது
விளக்க முடியாத அதிர்ச்சி. ஆனால் மெல்ல நான் கண்ணாடியை ரசிக்கத்
தொடங்கினேன், கண்ணாடி எனது ரகசிய வீடு என உணர்ந்தேன். என்னுடன் நான் பழகத்
தொடங்குவதற்குக் கண்ணாடியே உறுதுணையாக இருந்தது, இன்றும் கண்ணாடியே எனது
ஆத்ம நண்பன்.”
“ஜமீல் பெண்கள்தான் அதிகம் கண்ணாடியை நேசிப்பவர்கள்.”
“காரணம் அவர்களால் தன் அகத்தை எளிதாக அடையாளம் காண முடிந்துவிடுகிறது.”
அவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போது, அறையின் கதவு வழியே ஒரு கழுத்தில் மணி கட்டப்பட்ட பூனை ஒன்று மெதுவாக நடந்து வந்தது.
அந்த ஓசையைக் கேட்டுச் சிரித்தபடியே உமர் சொன்னான்
“கழுத்தில் மணி கட்டப்பட்ட பூனை உன் ஒருவனிடம் தானிருக்கிறது.”
“இதைப் பூனை என்று சொல்லாதே, இது ஒரு சூஃபி ஞானி. இதன் பெயர் என்ன
தெரியுமா. எலி. வேடிக்கையாக இருக்கிறதா, நான் அப்படித்தான் அழைக்கிறேன்,
ஒரு பூனை தன்னை எலி என அழைப்பதை ஒரு போதும் ஆட்சேபம் செய்வது கிடையாது.”
“ஜமீல், ஒரு பூனைக்கு எலி என்று பெயர் வைத்தவன் நீ ஒருவன்தான்” எனச் சிரித்தான் உமர்.
“இதைக் கேட்டால் நீ இன்னும் ஆச்சரியப்படுவாய், இந்தப் பூனைக்கு ரோஜாப்பூவை
மட்டும்தான் பிடிக்கிறது, அது ரோஜாவை முகர்ந்து பார்க்கிறது, ரோஜாப்
பூக்களை சுற்றிச் சுற்றி வருகிறது. ஞானிகளுக்கு ரோஜாவைப் பிடிக்கும்தானே”
என்று சொல்லிச் சிரித்தான். பிறகு பகடையை எடுத்து ஓரமாக வைத்துவிட்டு
எழுந்துகொண்டபடியே சொன்னான்.
“நேற்றிரவு ஒரு விசித்திரமான மனிதனைச் சந்தித்தேன். வீதியில் தூக்குக் கயிறு விற்றுக்கொண்டு போய்க்கொண்டிருந்தான்.”
“என்ன சொல்கிறாய் தூக்குக் கயிறா?”
“எனக்கும் இதே ஆச்சரியம்தான் ஏற்பட்டது, அவன் தன் தோளில் நிறைய
சுருக்கிடப்பட்ட தூக்குக் கயிறுகளைப் போட்டிருந்தான். உறுதியான முரட்டுக்
கயிறுகள், ஒன்றுபோல் செய்யப்பட்டிருந்தன. மலிவான விலையில் அவன் தூக்குக்
கயிறுகளை விற்றுக்கொண்டிருந்தான். வீடு கடைகளின் வாயில்களில் நின்று மக்கள்
அவன் குரலைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள். ஒருவர்கூட ஏன் ஒருவன் தூக்குக்
கயிறு விற்கிறான் எனக் கேட்கவேயில்லை.
எல்லா வணிகப் பொருட்களையும் போலத் தூக்குக் கயிறும் ஒரு சந்தைப்பொருள்தான்
என அவர்கள் கருதியிருக்கக்கூடும். நான் அவனிடம் ஏன் தூக்குக் கயிறு
விற்கிறாய் எனக் கேட்டபோது, “அதிகாரத்தின் கொடுஞ்செயல்களைத் தாங்க
முடியாமல் மனிதர்கள் அவதிப்படுகிறார்கள். அவர்கள் தங்களைத் தாங்களே
தண்டித்துக்கொள்ள உதவுவதற்காகத் தூக்குக் கயிறுகளை விற்கிறேன்” என்றான்.
“அந்தத் தூக்குக் கயிற்றில் நல்லதாக ஒன்றை நான் விலைக்கு வாங்கிக்கொண்டேன்” என்றான் ஜமீல்.
“உனக்கு எதற்காகத் தூக்குக் கயிறு” எனக் கேட்டான் உமர்.
“நீதி மறுக்கப்பட்டவர்களின் கதையைப் பாடுகிற என்னைச் சிறைச்சாலையின்
தூக்குக் கயிறு ஒரு நாள் இறுக்கத்தானே போகிறது, அதற்கு முன்பு நானே இதைக்
கழுத்தில் மாட்டி ஒத்திகை பார்த்துக்கொள்வது நலம்தானே” என்றான்.
“ஆள்பவர்கள் கவிதையைக் கண்டு ஒரு போதும் பயப்படுவதில்லை” என்றான் உமர்.
“அப்படி நினைத்துக்கொள்ளாதே, கவிதை என்பது விசித்திரமான ஆயுதம். உலகில்
இதுவரை கவிதைகளும் புத்தகங்களும்தான் தடைசெய்யப்பட்டிருக்கின்றன, ஆயுதம்
எதுவும் தடைசெய்யப்படவில்லை.”
“நீ உண்மையைத்தானே ஜமீல் பாடுகிறாய், பின் ஏன் பயப்படுகிறாய்”
“கவிஞர்கள் எவ்வளவு நேசிக்கப்படுகிறார்களோ, அவ்வளவு வெறுக்கவும்
படுவார்கள், இதுதான் உலகின் நியதி. இந்த தேசத்தில் மூன்று விதமான மனிதர்கள்
வாழ்கிறார்கள், ஒரு விதம் தன்னைச் சுற்றி நடக்கும் அவலத்திற்கு யார்
காரணம் என்ற உண்மையை அறிந்துகொள்ள ஒருபோதும் விரும்பாதவர்கள், இரண்டாம்
விதம் உண்மையை அறிந்துகொண்டு சொல்ல முடியாமலும் ஏற்றுக்கொள்ள முடியாமலும்
தவிப்பவர்கள், மூன்றாம் விதம் உண்மையைத் தேடி அறிந்துகொள்வதுடன் அதை
உரத்துச் சொல்பவர்கள். நான் மூன்றாவது வகையைச் சேர்ந்தவன், என்னால் உண்மையை
மறைத்துக்கொண்டு வாழ முடியாது.
அந்தத் தூக்குக் கயிறு விற்பவன் தனி நபரில்லை. நூற்றாண்டுகளாக அநீதி
இழைக்கப்பட்டவர்களின் அடையாளம். நான் அவனைப் பாடுவேன். நீதி
மறுக்கப்பட்டவனின் குரலை உலகமே கேட்கச்செய்வேன்.”
அப்போது குறுக்கிட்ட பூனை எரிச்சலான குரலில் “மியாவ்” என்றது
உமர் சிரித்தபடியே சொன்னான், “உனது பூனை ஒரு ஞானியேதான், உரத்த அறிவிப்புகள் எதுவும் அதற்கு பிடிப்பதில்லை.”
ஜலீல் தனது பூனையை எடுத்து அணைத்தபடியே சொன்னான், “பூனைகளுக்குக்கூட உண்மை பிடிப்பதில்லை.”
( உயிர்மை பதிப்பகத்தின் வெளியீடான ‘இடக்கை’ நாவல் இன்று மாலை சென்னை
ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள ரஷ்ய கலாச்சார மையத்தில்
வெளியிடப்படுகிறது.)