bluehost

Thursday, July 17, 2014

    எழு, நட, முன்னேறு – சத்குரு தரும் உத்வேகம்

      எதுவெல்லாம் தனக்கு எதிராக இருக்கும் என்று சொல்லப்பட்டதோ, அதையெல்லாம் தனக்கு சாதகமாக மாற்றிக் காட்டிய சத்குருவின் வாழ்க்கை அனுபவம் இங்கே. தனது வார்த்தைகளில் நம்முடன் பகிர்ந்துகொள்கிறார் சத்குரு…
சத்குரு:
‘இயலாது என்று எதுவுமே இல்லை’ என்பதை என் வாழ்வில் பலமுறை அனுபவப்பூர்வமாக உணர்ந்திருக்கிறேன்.
வாழ்க்கையில் ஒரு கட்டத்தில் விவசாயத்தில் எனக்கு விருப்பம் இருந்தது. அதற்காக கொடைக்கானல் போன்ற மலைப்பிரதேசங்களில் நிலம் வாங்க முயன்றேன். நடக்கவில்லை. மைசூரிலிருந்து 32 கி.மீ தள்ளி ஒரு மலைச்சரிவில் 14 ஏக்கர் நிலம் விலைக்கு வந்தது. அது விவசாயத்துக்குத் தோதான நிலம் அல்ல. பாறைகள் மிகுந்திருந்த இடம். இருந்தும், அந்த இடத்தைத் தைரியமாக வாங்கினேன்.
எதுவெல்லாம் எனக்கு எதிராக இருக்கும் என்று சொல்லப்பட்டதோ, அதையெல்லாம் எனக்குச் சாதகமாக மாற்றிக் கொண்டு, அந்த மேட்டுச் சரிவில் வெற்றிகரமாக விவசாயம் செய்து காண்பித்தேன்.
“இங்கே என்ன பயிரிட முடியும்?” என்று கேட்டார்கள். தென்னை போடப்போகிறேன் என்று சொன்னதும் சிரித்தார்கள். ஒவ்வொரு நாளும் நான் செய்யும் நடவடிக்கைகள் அங்கிருந்த கிராம மக்களின் நகைப்புக்கு இடம் அளித்தது.
பொதுவாக, மூன்றடிக்கு மூன்றடி குழி வெட்டி தென்னங்கன்றை அதில் நடுவது வழக்கம். நான் ஐந்தடிக்கு ஐந்தடி என்று குழி வெட்டினேன். அங்கே இருந்த புதர்களை வெட்டி தென்னைக்காக வெட்டிய குழிகளில் நிரப்பினேன். அங்கே மின்சாரம் இல்லை. அதனால் மேட்டார் பம்புகள் வைத்து தண்ணிர் இறைப்பது நடவாது. ஒரு புதிய முறை சொட்டு நீர்ப் பாசனத்தை ஆரம்பித்தேன்.
ஒவ்வொரு தென்னைக்கும் ஒரு பானை என்ற கணக்கில், பெரிய பெரிய பானைகள் வாங்கினேன். கிணற்றிலிருந்து தண்ணீரை இறைத்து நிரப்பக் கூலியாட்களை நியமித்தேன். பானையில் ஒரு ஓட்டை போட்டு தண்ணீர் சுரக்கும் இடத்தில் வைக்கோலை அடைத்தேன். தண்ணீர் வேகமாக வெளியேறிவிடாமல், சொட்டுச் சொட்டாக வெளியே வந்தது.
அந்தச் சரிவு நிலத்தின் கீழ்ப்பகுதியில் கிணறு தோண்டினால்தான் புத்திசாலித்தனம் என்று எல்லோரும் கருதினார்கள். என்னைவிட உயர்ந்த இடத்தில் நிலம் வைத்திருப்பவர்கள் கண்ணோட்டத்தில், என் நிலத்தின் மேல் பகுதியே தாழ்வான இடம்தானே என்பது என் வாதம். அந்தப் பகுதியில் ஆட்களோடு சேர்ந்து 25 அடி விட்டமுள்ள கிணறு வெட்டினேன். 16 அடி ஆழத்தில் பாறை தட்டுப்பட்டது. கைவிடாமல் தோண்டியதில், 18 அடி ஆழத்தில் தண்ணீர் தட்டுப்பட்டது. அத்தனை பேரும் வியந்தார்கள்.
உயரத்தில் தண்ணீர் இருந்ததால், அதைத் தனியே மோட்டார் வைத்து மேலே ஏற்றும் வேலை இல்லை. சரிவில் தானாக கீழ்நோக்கிப் பாய்ந்து எல்லா இடத்துக்கும் பாசனம் செய்யும் வசதி இருந்தது.
‘இந்த முட்டாள் செய்தது ஏதோ வேலை செய்கிறதே!’ என்று வேடிக்கை பார்க்க, எல்லோரும் கூட ஆரம்பித்தார்கள். பசு வைத்திருப்பவர்கள் அவற்றின் சாணத்தை எருவாக விற்க முன்வந்தார்கள். தென்னைக்குப் பசுவின் சாணம் சிறந்த எருவல்ல. அதில் இருக்கும் பூச்சிகளும், புழுக்களும் வேர்களைக் குடைந்து தின்றுவிடும்.
நானோ வேறு திட்டம் வைத்திருந்தேன். மைசூர் மிருகக்காட்சி சாலையில அத்தனை மிருகங்களின் கழிவுகளையும், தாவரக் குப்பைகளையும் ஒரு பெரிய குழியில் போட்டு வைப்பார்கள். அவ்வப்போது அதை குடகுமலை எஸ்டேட்டில் இருந்தவர்கள் வாங்கிப் போவார்கள் என்று அங்கிருந்த நண்பர் மூலம் அறிந்தேன். ஒரு லாரி லோடுக்கு இவ்வளவு என்று கட்டணம் விதித்திருந்தார்கள்.
கிராமத்திலிருந்து பையன்களை அழைத்துப் போனேன். பாதி பையன்கள் லாரியில் லோடு ஏற்றுவார்கள். மீது பையன்கள் அதன் மீது குறுக்கும் நெடுக்குமாக நடந்து அதை அழுத்துவார்கள். அப்படி அடைத்து அடைத்து ஏற்றியதில், ஒன்பது டன் லாரியின் கிட்டத்தட்ட பதினெட்டு டன் எடை வரை எரு ஏற்ற முடிந்தது. அதே பாரத்துடன் என் விவசாய இடம் வரை லாரியை ஓட்டிச் செல்ல முடியாது. லாரி வெளியே வந்ததும், இன்னொரு லாரியில் பாதி லோடை மாற்றி விடுவேன்.
விலங்கியல் பூங்காவிலிருந்த பல்வேறு மிருகங்களின் கழிவுப் பொருட்களை வாங்கி எருவாக எடுத்து வருவதைப் பார்த்து மறுபடி கிராம மக்கள் சிரித்தார்கள்.
கிட்டத்தட்ட 200 விலங்கினங்களின் கழிவு கலந்த எரு அபாரமாக இருந்தது. அந்த எருவை போட்டதும், என் தாவரங்கள் சந்தோஷமாக வெடித்துக் கொண்டு வளர்ந்தன. அதன் பின் மல்பெர்ரி, பருத்தி, முட்டைக்கோஸ் போன்றவற்றையும் பயிரிட முடிந்தது.
புதிய பிரச்சனையாக அந்தப் பகுதியில் திடீரென்று பார்த்தீனியம் காடாக வளர்ந்துவிட்டது. அதை வேரோடு பிடுங்கிக் களைவதே மற்றவர்களுக்குப் பெரும்பாடாக இருந்தது. நான் வேரோடு பிடுங்கவில்லை. பார்த்தீனியத்தை அப்படியே வெட்டிச் சாய்க்க மட்டும் இரண்டு ஆட்களை போட்டேன். கொள்ளு போட்டு அதன் மீது வெட்டிய பார்த்தீனியத்தைப் போட்டதும். அந்த இடமே காடு போல் வளர்ந்து பூமியை மூடிவிட்டது.
நேரடியாக வெயில் விழாததால், தண்ணீர் வற்றிப் போகாமல், பயிரிட்ட தாவரங்களின் வேர்களில் ஈரப்பதம் தங்கியது. பத்துப் பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் பாய்ச்சினாலே போதுமானதாக இருந்தது. அது தாவர வளர்ச்சிக்கு மிகவும் பயன்பட்டது.
இப்படி எதுவெல்லாம் எனக்கு எதிராக இருக்கும் என்று சொல்லப்பட்டதோ, அதையெல்லாம் எனக்குச் சாதகமாக மாற்றிக் கொண்டு, அந்த மேட்டுச் சரிவில் வெற்றிகரமாக விவசாயம் செய்து காண்பித்தேன்.
பிற்பாடு, ஆன்மீகப் பாதையில் என் கவனம் திரும்பியதால், அந்த இடத்தை வேறொருவருக்குக் கொடுத்துவிட்டேன்.
‘முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்படலாமா?’ என்று ஒரு கூற்று இருப்பதைக் கேள்விப்பட்டேன். ஏன் ஆசைப்படக்கூடாது? தேனுக்கு ஆசைப்படும் அத்தனை பேரும் மரம் ஏறத் தெரிந்தவர்களாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. தான் ஆசைப்பட்ட தேனைத் தன் கைக்குக் கொண்டு வரும் திறனை வளர்த்துக் கொண்டால் போதும்.

No comments: