bluehost

Wednesday, April 21, 2021

தந்தைமை – 1



சில நாட்களுக்கு முன்பு:

காலை எட்டரை மணி. என் பையனை பள்ளியில் விடுவதற்காக பரபரப்பாக கிளம்பி கொண்டிருந்தேன். பக்கத்து வீட்டில் இருப்பவர் தன் மகனிடம் ஏதோ சத்தமாக பேசிக் கொண்டிருந்தார்.  சிறிது முரட்டுத் தோற்றம் உடையவர். சிவப்பு ராஜ்கிரண் என்று சொல்லலாம். சில அரசியல் தொடர்புகளும் உண்டு. அவர் தன் மகனிடம் “டேய் இன்னும் டைம் ஆகவில்லை. அவசரப்படாதே. காலேஜுக்கு நிதானமாகப் போகலாம். ஸ்கூட்டரில் மெதுவா போடா. ஹெல்மெட் எடுத்துக்கோ” என்றெல்லாம் சொல்லிக்கொண்டிருந்தார். பையன் அவர் வார்த்தைகளை பொருட்படுத்தாமல் வேகமாகச் சென்று ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்தான். அதற்குள் அவன் அம்மா “டேய்! லஞ்ச் பேக்கை விட்டுட்டு போறியேடா” என்று சத்தம் போட்டார். இவர் வீட்டின் உள்ளே ஓடிச்சென்று, லஞ்ச் பேக்கை எடுத்துக்கொண்டு வந்து பையனிடம் தந்தார். அவன் எதுவும் சொல்லாமல் வாங்கிக் கொண்டு, ஸ்கூட்டரில் வேகமாக பறந்தான். அவருடைய முகம் சட்டென்று மாறியது. மகன் அலட்சியப்படுத்தியன் வலி அதில் தெரிந்தது. அவருக்கு தெரிந்த ஒருவர் அவரைப் பார்க்க வந்தார். ஒரு ஆண் எப்போதும் தன் வலியை மற்றவர்கள் முன்பு வெளிப்படுத்திக் கொள்ளக்கூடாது. வலியை முகத்திலிருந்து உதறி, புன்னகையை அணிந்துக் கொண்டார்.  “பசங்க நம்மள மதிக்க மாட்டேங்கிறாங்க” என்று அவரிடம் சொல்லிச் சிரித்தார்.

என் அப்பாவும் அப்படித்தான் நான் சைக்கிளில் ஸ்கூலுக்கு போகும் போது “பார்த்து போடா” என்று சொல்லுவார். அப்போது அதன் அருமை எனக்கு தெரியவில்லை. இப்போது என் பையன் சைக்கிளில் போகும்போது அதே வார்த்தையை நான் சொல்கிறேன். போனவாரம், பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள பேக்கரியில், பிரெட் வாங்குவதற்காக என் பையன் சைக்கிளில் கிளம்பிப் போனான். அது பஸ் எல்லாம் வருகின்ற ரோடு. மனம் கேட்கவில்லை.  நான் சட்டை அணிந்து கொண்டு அவன் பின்னாடியே நடந்து போனேன். அவன் பேக்கரியில் ரொட்டி வாங்கி விட்டு, வெளியே சைக்கிளை எடுக்க வந்தான். நான் அவன் அருகில் போனேன். என்னைப் பார்த்து, “நீ ஏம்ப்பா வந்த? என்று கேட்டான். “ச்சும்மாதானான்” என்று சொல்லிவிட்டு, அதிக போக்குவரத்து இல்லாத வேறு ஒரு சந்தின் வழியாக அவனை வீட்டிற்கு போக சொல்லிட்டு, பின்னாலேயே நடந்து வந்தேன்.

மாலை ஏழு மணி. 

பையன் பக்கத்து தெருவில் உள்ள பேட்மிட்டன் கோர்ட்டுக்கு விளையாட போய் இருக்கிறான். பயிற்சி முடித்துவிட்டு எப்போதும் 7 மணிக்கு வீடு திரும்பி விடுவான். தாமதமானால் நானே பேட்மிட்டன் கோர்ட் வரை போய் விடுவேன். நான் தேடிப்போனால் என் பையனுக்கு பிடிக்காது “ஏம்பா! நான் இங்கதானே இருக்கேன். நீ ஏன் வந்த?” என்று கேட்பான். சில சமயம் தாமதமாகும் என்று முன்பே தெரிந்தால், போகும்போது அவன் “இன்னிக்கி டோர்னமெண்ட் ட்ரெய்னிங் இருக்கு. வரத்துக்கு லேட் ஆகும். என்னைத் தேடி அங்க  வந்துடாதே” என்று பொறுப்புடன் சொல்லி விட்டுப் போவான். இன்று ஒன்றும் சொல்லவில்லை. 

மணி 7.10 

மனதில் லேசாக பயம் பரவியது. என் மனைவியும் “என்னப்பா! இன்னும் வரல” என்று கலவரமானாள். ஆண்கள் தங்கள் பயத்தை வெளியே காட்டிக் கொள்ளக்கூடாது. என்ன ஆனாலும் வடிவேலு மாதிரி, முகத்தை கெத்தாக வைத்துக்கொள்ள வேண்டும். 

மணி 7.15 

சரி! போய் பார்த்துவிடலாம் என்று சட்டையை எடுத்து போட்டுக் கொள்ளத் தொடங்கினேன். அதற்குள், மணி அடித்தவாறே பையன் சைக்கிளை ஓட்டிக்கொண்டே, காம்பவுண்டுக்குள் நுழைந்தான். மனம் லேசானது.

புத்தனாவது சுலபம்*. ஆனால் அப்பனாக வாழ்வது கடினம்.

*புத்தனாவது சுலபம் – எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய சிறுகதையின் தலைப்பு.

No comments: