என்னுடைய நண்பர் ஒருவர், மற்றவர்கள் வீட்டில் உணவு உண்ண மாட்டார். "மற்றவர்கள் வீட்டில் சாப்பிட்டால் அவர்களின் குணம் எனக்கு வந்து விடும். கெட்டவர்களின் உணவை உண்டால் கெட்ட குணம் வந்துவிடும்" என்பார். (எங்களைப் போன்ற நல்லவர்களின் வீட்டில் உணவு உண்டால் உனக்கு நல்ல குணம் வருமே என்று மனதிற்குள் நினைத்துக் கொள்வேன்). அதற்கு வியாக்கியமாக மகாபாரதத்தில் இருந்து ஒரு கதை சொல்வார்.
பீஷ்மர் அர்ஜுனன் தொடுத்த அம்புகளால், உடல்முழுதும் தைக்கப்பட்டு அம்பு படுக்கையில் படுத்திருக்கிறார். அவர் விரும்பிய நேரத்தில் தான் உயிர் பிரியவேண்டும் என்ற வரத்தை பெற்றிருந்தார். அதனால் உத்தராயண காலத்திற்காக காத்திருக்கிறார். அப்போது உயிர் துறந்தால் புண்ணியம். (சூரியன் ஆறு மாத காலம் தெற்கு நோக்கி நகரும். அது தட்சிணாயனம். அடுத்த ஆறு மாதம் வடக்கு நோக்கி நகரும். அது உத்தராயணம். தைமாதம் முதல் உத்தராயணம் ஆரம்பம் ஆகும்). பாண்டவர்கள் பீஷ்மரைக் காண வருகின்றனர். அவர்களுடன் திரெளபதியும் வருகிறாள். அவர்கள் பீஷ்மரை வணங்கி அறிவுரை சொல்ல வேண்டுகின்றனர். அவரும் மிக உன்னதமான தர்மநெறிகளை அவர்களுக்கு போதிக்கிறார். அப்போது இடையில் திரௌபதி "க்ளுக்" என்று சிரித்துவிடுகிறாள். எல்லோரும் அவளை சினத்துடன் பார்க்கின்றனர். பீஷ்மர் அவளிடம் காரணம் கேட்கிறார். "ஒன்றும் இல்லை. நான் முட்டாள்தனமாக சிரித்துவிட்டேன். என்னை மன்னித்துவிடுங்கள்" என்கிறார். ஆனால் பீஷ்மர் "நீ முட்டாள் கிடையாது. புத்திசாலித்தனமான பெண். உண்மையான காரணத்தை சொல்" என்று கேட்கிறார்.
அதற்கு திரௌபதி "சபையில் துச்சாதனன் என்னை துகிலுறித்தபோது நீங்கள் ஏன் இந்த நியாயங்களை பேசவில்லை? மௌனமாக சிலைப் போன்று அமர்ந்திருந்தீர்கள்" எனக் கேட்கிறாள். பீஷ்மர் கடும் மனவேதனை அடைகிறார். பிறகு "நான் அப்பொழுது துரியோதனன் இட்ட உணவை உண்டு கொண்டிருந்தேன். என் ரத்தம் முழுதும் அவனின் கெட்ட குணம் நிரம்பி இருந்தது. அதனால்தான் அப்பொழுது நான் வாய் மூடியிருந்தேன். இப்போது அர்ஜுனன் விட்டு அம்பினால் அந்த கெட்ட இரத்தம் முழுவதும் என் உடலை விட்டு வெளியேறி விட்டது. அதனால்தான் நியாய தர்மங்களை தற்போது பேசுகிறேன்" என்கிறார்.
இந்தக் கதையை அந்த நண்பர் மேற்கோள் காட்டுவார். ஆனால் எனக்கு ஒரு ஐயம்? ரமண மகரிஷி போன்ற யோகிகள் நான்கைந்து வீடுகளில் பிச்சை எடுத்துதானே உண்டனர். அவர்களின் குணம் கெட்டுவிட்டதா?
ஒருவரின் வீட்டில் உண்ண மறுப்பது அவரை இழிவுபடுத்தும், நிராகரிக்கும் செயலாகும். சைவ உணவு பழக்கம் கொண்டவன் நான். ஆனால் அதை நண்பர்களின் வீடுகளில் கறாராக பின்பற்ற மாட்டேன். அவர்கள் அன்புடன் எது தந்தாலும் சாப்பிடுவேன். வேண்டாம் என்று மறுத்தால் அது ஒரு பிரிவினையை உண்டாக்கிவிடும். மோர் ஊற்றிய நீர் சாதம், கேழ்வரகு கூழ் முதல் அட்டகாசமான விருந்து சாப்பாடு வரை நண்பர்கள் வீட்டில் சாப்பிட்டு இருக்கிறேன். அதேசமயம் அன்பும், மரியாதையும் இல்லாமல் அழைக்கப்பட்ட பெரும் விருந்துகளை புறக்கணித்து இருக்கிறேன். அன்பில்லாமல் பரிமாறப்படும் உணவு விஷம்.
2003ஆம் ஆண்டு. அப்போது நான் அவிநாசியில் வேலை செய்து கொண்டிருந்தேன். ஒரு முறை அலுவலக வேலையாக சேலம் போய்விட்டு அவிநாசி திரும்பும்பொழுது எதிர்பாராதவிதமாக இரவு பத்து மணிக்கு மேலாகிவிட்டது. உணவு உட்கொள்ளவில்லை. அங்கு ஒன்பது மணிக்கெல்லாம் கடைகளை சாத்திவிடுவார்கள். உணவகங்களும் மூடியிருந்தன. சாலையோரம் ஒரு தள்ளுவண்டியில் சாப்பாட்டுக்கடை இருந்தது. அருகில் போனேன். அதுவும் விளக்கு அணைக்கப்பட்டிருந்தது. அந்த கடைக்காரர் "டிபன் தீர்ந்திடுச்சு சார்' என்றார். திரும்பி நடந்தேன். "சார்! ஒரு நிமிஷம்" என்று கூப்பிட்டார்.நின்றேன். "நான் சாப்பிடுவதற்காக கொஞ்சம் பரோட்டா வச்சிருக்கேன். வாங்க சாப்பிடலாம்" என்றார். முதலில் நான் வேண்டாம் என்று மறுத்தேன். இல்ல சார் வாங்க என்றார். அதற்குமேல் மறுத்தால் அவரை இழிவுபடுத்துவது போன்றாகிவிடும்.
பிளாஸ்டிக் டம்ளரில் தண்ணீர் தந்தார். கைகளை கழுவிக்கொண்டேன். தள்ளு வண்டியில் இருந்து ஒரு பிளாஸ்டிக் ஸ்டூலை எடுத்து போட்டு, என்னை உட்காரச் சொன்னார். ஒரு வாழையிலையில் மூன்று பரோட்டா, சிறிது சேர்வா ஊற்றி என்னிடம் தந்தார். மீதமிருந்த இரண்டு பரோட்டாக்களை இலையில் எடுத்துக் கொண்டு நடைபாதையில் உட்கார்ந்தார். ஒரு கருப்பு நாய் ஓடி வந்தது. நம்ம பையன்தான் என்று அதுக்கு பாதி பரோட்டாவை கிழித்துப் போட்டார். அது வாயில் கவ்விக்கொண்டு சிறிது தூரத்தில் சென்று அமர்ந்து நிதானமாக கடித்து சாப்பிட்டது.
ஆளரவமற்ற நெடுஞ்சாலை. அவ்வப்பொழுது சீறிப்பாய்ந்து செல்லும் கனரக வாகனங்கள். சோடியம் விளக்கின் ஆரஞ்சு நிற ஒளி. மிதமான குளிர். அந்த இரவில் நான், அவர், அந்த நாய் மூன்று பேரும் சாப்பிட்டது - கடவுளின் தருணம் எனலாம்.
ஆச்சாரங்கள் - அகந்தையின் வடிவங்கள்.
அகந்தை - அன்பினை அறியாது.
சு.இரவிச்சந்திரன்
No comments:
Post a Comment