bluehost

Thursday, December 18, 2008

என் தம்பியை பிடிக்க முடியாது-பிரபாகரனின் சகோதரி



டோரன்டோ: எனது சகோதரர் பிரபாகரனுக்கு எந்த ஆபத்தும் இல்லை. எடுத்த காரியத்தை முடிக்காமல் அவர் ஓய மாட்டார் என்று விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் மூத்த சகோதரி வினோதினி ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.பிரபாகரனின் மூத்த சகோதரி வினோதினி ராஜேந்திரன். இவர் கனடாவின் டோரன்டோ நகரில் வசித்து வருகிறார்.

பிரபாகரனின் இளமைகால படங்கள் வினோதினியின் வீட்டின் வரவேற்பு அறையை அலங்கரிக்கின்றன. வினோதினியின் அறையில் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் கொடி தொங்க விடப்பட்டுள்ளது.பிரபாகரனின் சகோதரியாக இருந்தபோதிலும் கனடாவில் நடக்கும் தமிழ் நிகழ்ச்சிகள் எதிலும் வினோதினி பங்கேற்பதில்லை. அதேபோல அரசியலிலும் அவர் ஆர்வம் காட்டுவதில்லை. தொலைக்காட்சிகள் மூலமாகவும், இணையதளங்கள் மூலமாகவும் இலங்கை நிலவரங்களை அறிந்து கொள்வதில் மட்டும் ஆர்வம் காட்டுபவர் வினோதினி.

பிரபாகரன் குறித்தும், தங்களது கடந்த கால வாழ்க்கை குறித்தும் கனடா நாட்டு பத்திரிக்கையான நேஷனல் போஸ்ட்டுக்கு வினோதினி பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது ...யாழ்குடா பகுதியின் கடலோரத்தில் உள்ள வல்வெட்டி துறைதான் எங்கள் சொந்த ஊர். நாங்கள் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள். எங்கள் தந்தை அரசு ஊழியர். நேர்மையை கடைபிடிப்பவர். அமைதியாகத்தான் பேசுவார். கடவுள் பக்தி அதிகம். உள்ளூர் கோவிலில் அறக்கட்டளை உறுப்பினராக இருந்தார்.

அரசு ஊழியராக இருந்தபோதிலும், எங்களது தந்தை லஞ்சம் வாங்க மாட்டார். மது அருந்த மாட்டார், சிகரெட் பிடிக்க மாட்டார். மிகவும் கட்டுப்பாடானவர், ஒழுக்கம் நிரம்பியவர். அவர் மாவட்ட நில அதிகாரியாக பணியாற்றினார்.வல்வெட்டித்துறையில் இருந்த எங்களது வீடு எளிமையானது. சிறிய வராண்டாவும், அழகிய வாழை மரமும் வீட்டின் முன்பு உண்டு. வீட்டைச் சுற்றிலும் வேலை அமைத்திருந்தோம்.

நான் 2 வயதாக இருக்கும் போதுதான் பிரபாகரன் 1954ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி யாழ்ப்பாணம் மருத்துவமனையில் பிறந்தார். வீட்டில் மற்றவர்களை விட அவருக்குத்தான் செல்லம் அதிகம். எல்லோரையும் போலத்தான் அவரும் சாதாரண பையனாக வளர்ந்தார். அவரும் நானும் சின்ன வயதில் நிறைய சண்டை போடுவோம்.என் அம்மாவுக்கு புத்தகம் படிப்பதில் நிறைய ஆர்வம் உண்டு. அந்த பழக்கம் பிரபாகரனையும் தொற்றிக்கொண்டது. எப்போதும் படித்துக்கொண்டே இருப்பார். நூலகங்களில் இருந்து புத்தகங்களை வாங்கி வருவார். சரித்திர புத்தகங்கள் மீது அவருக்கு ஆர்வம் அதிகம். குறிப்பாக இந்திய சுதந்திர போராட்ட வீரர்களை பற்றிய புத்தகங்கள் என்றால் அவருக்கு மிகவும் பிடிக்கும். அதன் மூலமாகத்தான் புரட்சி இயக்கங்கள் மீது ஆர்வம் ஏற்பட்டு இருக்கலாம் என்று நினைக்கிறேன்.

எனது திருமணம் வல்வெட்டித்துறையில் நடந்தது. அப்போதே அவர் அரசுக்கு எதிராக மறைமுகமான காரியங்களில் ஈடுபட்டு வந்ததாக எங்கள் காதுகளுக்கு செய்தி வந்தது. அதன் பிறகு புதிய தமிழ் புலிகள் என்ற பெயரில் இயக்கத்தை உருவாக்கினார். அந்த இயக்கம் இலங்கை ராணுவத்துக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டதாக கூறப்பட்டது.

1972ம் ஆண்டில் ஒரு நாள் அவரை தேடி எங்கள் வீட்டுக்கு போலீஸ் வந்தது. உடனே பின்புற வாசல் வழியாக தப்பிச்சென்று விட்டார். அதன் பிறகு வீட்டுக்கு வருவதை நிறுத்திக் கொண்டார். யாழ்ப்பாணத்தில் பிரபாகரன் நடத்திய தாக்குதலை தொடர்ந்து கொழும்பில் கலவரம் வெடித்தது. அப்போது நானும் என் கணவரும் கொழும்பில் வசித்து வந்தோம். என் கணவர் துறைமுகத்தில் பணியாற்றி வந்தார். பிரபாகரன் எங்கள் குடும்பத்தை சேர்ந்தவர் என்ற விவரம் தெரிய வந்ததால் என் கணவருக்கு வேலை பறிபோனது.

சில நாட்கள் அகதி முகாமில் தங்கியிருந்த நாங்கள் மீண்டும் யாழ்ப்பாணம் திரும்பினோம். அங்கும் அரசின் தொல்லைகள் அதிகமானதால் சென்னை வந்தோம். அப்போது பிரபாகரனும் சென்னையில்தான் தங்கியிருந்தார். சென்னையில் நாங்கள் ஒரு உறவினரின் திருமணத்துக்கு சென்று இருந்த போது பிரபாகரனும் வந்தார்.நீண்ட நாட்களுக்கு பிறகு அப்போதுதான் அவரை நாங்கள் சந்தித்தோம்.அதன் பிறகு அவர் இலங்கைக்கு போகும் முன்பு எங்களை சந்தித்து, தான் ஊருக்கு போகப்போவதாக கூறிவிட்டு சென்றார்.

1997ம் ஆண்டு நானும் என் கணவரும் கனடாவுக்கு வந்து
விட்டோம். 2003ம் ஆண்டு நாங்கள் மீண்டும் இலங்கை சென்றோம். அப்போது என் பெற்றோரை சென்னையில் இருந்து கிளிநொச்சிக்கு அழைத்துச்சென்று தங்க வைத்தோம். அந்த நேரத்தில் எங்கள் வீட்டுக்கு சென்று இருந்தேன். நான் ஓடியாடி விளையாடிய வீடு குண்டு வீச்சில் உருக்குலைந்து போய் இருந்ததைப்பார்த்து துடித்து போனேன்.

என் பெற்றோரிடம் இருந்து அவ்வப்போது கடிதம் வரும். ஆனால் பிரபாகரனை பார்த்து எத்தனையோ ஆண்டுகள் ஆகிவிட்டது. அவருடன் எந்த தொடர்பும் இல்லை என்று கூறியுள்ளார் வினோதினி.வினோதினியின் வீட்டின் வரவேற்பறையில் மகாபாரத யுத்த களத்தில் அர்ஜுனனுக்கு கிருஷ்ணர் கீதா உபதேசம் செய்யும் போட்டோ இடம் பெற்றுள்ளது. அதன் கீழ் சில வாசகங்கள்.

கிருஷ்ணரை பார்த்து அர்ஜுனன் கேட்கிறான். "அவர்கள் என் உறவினர்கள் அல்லவா அவர்களை எதிர்த்து நான் எப்படி போரிடுவது?''அதற்கு கிருஷ்ணர் கூறுகிறார். "அது உன்னுடைய கடமை நான் கடவுள். நான் சொல்வதை செய்.''வினோதினி அந்த படத்தை காட்டி கிருஷ்ணர் சொன்னதை கேட்டதும் அர்ஜுனன் போரில் இறங்கினான். பிரபாகரனுக்கு மகாபாரதம் மிகவும் பிடிக்கும்.பிரபாகரன் எந்த காரியத்தை கையில் எடுத்தாலும் அதை முடிக்காமல் விட மாட்டார். ஈழ விடுதலைப் போரை தொடங்கியவர் அவர். அதனால் அதில் இருந்து அவர் பின்வாங்க மாட்டார். எங்கள் தந்தையை போன்று
மன உறுதி படைத்தவர் என்றார்.வினோதினியின் கணவர் தற்போது டோரன்டோவில் உள்ள பர்னிச்சர் கடையில் பகுதி நேர வேலை பார்த்து வருகிறார்.

http://cenimafun.blogspot.com/2008/12/blog-post_1901.html

No comments: