இந்த தலைப்பு என் நண்பர்களுக்கு வியப்பை தரலாம். ஆனால், நேற்று ஃபேஸ்புக்கில் கண்ட பதிவு ஒன்று என்னை இந்த பதிவினை எழுத தூண்டியது. "நீ உண்மையான இந்து என்றால், பா.ஜ.க.வுக்குதான் வாக்களிக்க வேண்டும். இல்லை என்றால் நீ இந்துவும் கிடையாது. இந்தியனும் கிடையாது" என்பதுதான் அப்பதிவு. "இது என்னடா புதுசா இருக்கு" என்று வடிவேலு பாணியில் யோசிக்க ஆரம்பித்தேன்.
இவர்களுக்கு பா.ஜ.க.வின் வரலாறு தெரியுமா? அந்த கட்சி, நாற்பது ஆண்டுகளுக்கு முன்புதான்,(1980) தொடங்கப்பட்டது. அதற்கு முன் வாக்களித்த இவர்களின் பெற்றோர்கள், இந்துக்கள் இல்லையா? ஆன்டி இண்டியன்களா? இந்துக்கள் இல்லாத பெற்றோர்களுக்கு பிறந்த, இவர்கள் மட்டும் எப்படி இந்துக்கள் ஆனார்கள்? இவர்களுக்கு ப.ஜா.க. அறிமுகம் ஆனது அண்மையில்- மோடியின் காலத்தில்தான். ஆனால் எனக்கு 1989ஆம் ஆண்டில், நான் பதினொன்றாம் வகுப்பு படிக்கும் போது.
1984ஆல், இந்திரா காந்தியின் படுகொலையை தொடர்ந்து, பெரும் எதிர்பார்ப்புடன் பிரதமரான இராஜிவ் காந்தி, தனது ஐந்து ஆண்டு கால ஆட்சியின் முடிவில் மக்களிடையே செல்வாக்கு இழந்து இருந்தார். இளைஞர், இந்தி திரைப்பட நாயகர்களுக்கு இணையான வசீகர தோற்றம், மென்மையான குணம், மேன்னாட்டு கல்வி கற்றவர், நாட்டின் இளைய பிரதமர். அவர் பதவி ஏற்கும் போது "நான் ஒரு இளைஞன். எனக்கு கனவு காணும் உரிமை உண்டு" என்று கூறினார். ஆனால், எல்லாக் கனவுகளும் நிறைவேறுவது இல்லை. கனவுக் கண்டவரை, அக்கனவுகளே பலிக்கொண்டது - ஒரு வரலாற்று சோகம்.
பெரும் எதிர்பார்ப்புடன் நிறைவேற்றப்பட்ட பஞ்சாப் ஒப்பந்தம், காஷ்மீர் ஒப்பந்தம், இந்திய-இலங்கை உடன்படிக்கை ஆகியவை, சில மாதங்களிலேயே தோல்வி அடைந்ததன.
(அப்போது, பஞ்சாப் மாநிலத்தில், காஷ்மீர் போன்று, "காலிஸ்தான்" என்னும் தனிநாடுக் கேட்டு ஆயுத போராட்டம் நடைப்பெற்றது). அரசியல் அனுபவமற்ற இராஜீவ் காந்தி, தன் மூத்த சகாக்களால் தொடர்ந்து, தவறாக வழிநடத்தப்பட்டார். இறுதியாக அவருடைய ஆட்சிக்கு, பேரிடியாக "போபர்ஸ் பீரங்கி ஊழல்" அமைந்தது.
(அப்போது, பஞ்சாப் மாநிலத்தில், காஷ்மீர் போன்று, "காலிஸ்தான்" என்னும் தனிநாடுக் கேட்டு ஆயுத போராட்டம் நடைப்பெற்றது). அரசியல் அனுபவமற்ற இராஜீவ் காந்தி, தன் மூத்த சகாக்களால் தொடர்ந்து, தவறாக வழிநடத்தப்பட்டார். இறுதியாக அவருடைய ஆட்சிக்கு, பேரிடியாக "போபர்ஸ் பீரங்கி ஊழல்" அமைந்தது.
இராஜிவ் காந்தியின் அமைச்சரவையில், பாதுகாப்பு அமைச்சராக இருந்த வி.பி.சிங் இந்த முறைக்கேட்டை அம்பலப்படுத்தினார். நாடு முழுவதும் காங்கிரஸூக்கு எதிரான மனநிலை தோன்றியது. எதிர் கட்சிகள் இணைந்து, "தேசிய முன்னணி" என்ற கூட்டணியை உருவாக்கின. தமிழ் நாட்டில் தி.மு.க. அக்கூட்டணியில் இணைத்தது. அப்போது, தமிழ் நாட்டில் புதுவரவாக பா.ஜ.க. வந்தது.
முதன்முறையாக பிளாஸ்டிக் கொடிகளை அறிமுகப்படுத்திய பணக்கார கட்சி பா.ஜ.க.தான். அக்கட்சியின் வருகை, காங்கிரஸூக்கு மாற்றினை தேடியவர்களை வசீகரித்தது. என்னையும், நடராஜனையும் புதிதாக வந்த பா.ஜ.க. ஈர்த்தது. நான் அவனிடம் பா.ஜ.க. கொடி கிடைக்குமா? எனக்கேட்டேன். மறுநாள், அவனை பள்ளியில் சந்தித்தபோது, ஒரு புத்தகத்தினை எடுத்து, திறந்து அதன் நடுவில் மடித்து வைக்கப் பட்டிருந்த கொடியினை காட்டினான். இரண்டு அடி நீளமும், ஒரு அடி அகலமும் கொண்ட கொடியை, நான்காக மடித்து வைத்திருந்தான். ஒரு பொக்கிஷத்தைப் போல், மிகுந்த கவனத்துடன் அதை என்னிடம் தந்தான்.
அக்கொடியை, என் வீட்டு மாடியில் இருந்த மின் கம்பத்தில் கட்டினேன். எனது அப்பா, தி.மு.க. அபிமானி. ஆனால் perfect gentle man. அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. "கொள்கை எல்லாம் உனக்குள் வைத்து கொள். வீட்டில் கட்சிக்கொடி பறக்கவிடாதே" என மென்மையாக அறிவுறுத்தினார். நான் கழற்றி விட்டேன்.
இன்று, "தாமரை மலர்ந்தே தீரும்" என்ற வாசகம் அதிகம் விவாதத்துக்கு உள்ளானது. ஆனால், அந்த தாமரை சின்னத்திற்கே அப்போது பெரும் ஆபத்து வந்ததை, இன்றைய மோடி பக்தர்கள் அறிந்திருக்க மாட்டார்கள். தாமரை - இந்தியாவின் தேசிய மலர். ஆகையால், அதனை ஒரு கட்சியின் சின்னமாக வைக்கக்கூடாது என சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். பிறகு அதற்கு தீர்வு காணப்பட்டது.
1989ஆம் ஆண்டு, பாராளுமன்றத் தேர்தலில் தேசிய முன்னணி வட இந்தியாவில் கணிசமான இடங்களில் வெற்றி பெற்றது. ஆனால், தென்னிந்தியாவில் காங்கிரஸ் பெரும்பாலான இடங்களை கைப்பற்றியது. யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. வி.பி.சிங் பா.ஜ.க. ஆதரவுடன் ஆட்சி அமைத்தார். கட்சிக்குள் அப்பவே உரசல். சமரசம் செய்து, தேவிலாலுக்கு துணைப் பிரதமர் பதவி வழங்கப்பட்டது. அவர் பதவியேற்றதும், நாடு முழுவதும் உள்ள விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்து, அதகளம் செய்தார். வி.பி.சிங் நிச்சயமற்ற நிலையிலேயே ஆட்சியை தொடர்ந்தார்.
அப்போது, பா.ஜ.க. என்றால் எல்.கே.அத்வானிதான். மூத்த அரசியல்வாதி. மேடைகளில் ஆவேசமாக முழங்க கூடியவர். அவர் ராமஜென்ம பூமி பிரச்சினையை கையிலெடுத்தார். 1990 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வலியுறுத்தி, ரதயாத்திரையை தொடங்கினார். குஜராத்தில் உள்ள சோம்நாத்தில் ஆரம்பித்து, அயோத்தி நோக்கி ரதயாத்திரை சென்றது. இதனால், பல இடங்களில் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தன. பீகாரில் நுழைந்த அத்வானியை, அப்போதைய பீகார் முதல்வர் லல்லு பிரசாத் யாதவ் கைது செய்தார். ரத யாத்திரை முடிவுக்கு வந்தது. ஆனால் பா.ஜ.க.விற்கு செல்வாக்கு அதிகரித்தது. வி.பி.சிங்குக்கு அளித்து வந்த ஆதரவை பா.ஜ.க. விலக்கி கொண்டது. அவருடைய ஆட்சி ஓர் ஆண்டைக் கூட நிறைவு செய்ய முடியாமல் கவிழ்ந்தது.
டைம்ஸ் நாளிதழின், 1990ஆம் ஆண்டின் சிறந்த மனிதர்கள் பட்டியலில், அத்வானி இருந்தார். இந்த ஆட்சிக் கவிழ்ப்பு நடவடிக்கைக்கு பிறகு, அப்பட்டியலில் இருந்து அவர் பெயர் நீக்கப்பட்டது. பாபர் மசூதி இடிப்பு, ராமர் கோவில் என பா.ஜ.க. தீவிர இந்துத்துவ பாதையில் பயணிக்க தொடங்கியது. நானும் பா.ஜ.க.வை விட்டு எதிர் திசையில் செல்ல ஆரம்பித்தேன்.
சிறிதுகூட வரலாற்று அறிவோ, அரசியல் அறிவோ இல்லாதவர்கள், எதிர் கருத்து கொண்டவர்களை, தேச விரோதிகள் என சொல்வது நகைப்புக்குரியது.
சு.இரவிச்சந்திரன்
No comments:
Post a Comment