bluehost

Wednesday, February 26, 2020

ரமண மகரிஷி - பாலகுமாரன்


Image may contain: 2 people, drawing, possible text that says 'ஸ்ரீரமண மகரிஷி பாலகுமாரன்'

சிறுவன் வேங்கடராமன் குடும்பத்தை விட்டு பிரிந்து, ஞானத்தை தேடி, திருவண்ணாமலைக்கு வந்தான். அங்கு தங்கி பல ஆண்டுகள் தவம் புரிந்தான். காலங்கள் ஓடின. வேங்கடராமன் - இரமண மகரிஷி ஆனார். அவருடைய குடும்பத்தினர் செய்தி அறிந்து அவரை காண வந்தனர். கணவனை இழந்த அவர் தாய், தன் மகன் சந்நியாசியாக மாறிவிட்டதை அறிந்து மிகவும் வேதனைப்பட்டார். சம்சாரியை, மனைவி பார்த்துக் கொள்வாள். ஆனால், சந்நியாசியான தன் மகனை யார் கவனித்துக் கொள்வார்கள் என்று அவருடனே தங்கியிருக்க விரும்பினார்.
முற்றும் துறந்த ஞானிகளால் கூட, தாயன்பை துறக்க இயலவில்லை. இரமண மகரிஷியும் அதற்கு விலக்கல்ல. அப்படி அவர் துறந்திருந்தால் அவர் ஞானியும் அல்ல. இரமணரும் தன் தாய், தன்னுடன் இருக்க இசைந்தார். பகல் பொழுது, தன் மகனுடன் இருந்து பணிவிடைகள் செய்துவிட்டு, மாலையில் மலையைவிட்டு இறங்கி, ஊரில் தங்கிக் கொள்வார். ஆனால் நாளாக நாளாக வயதின் முதிர்வால், அவரால் மலை ஏறி, இறங்க முடியவில்லை. அதனால், இரமணரிடம் கேட்டு, ஆசிரமத்திலேயே தங்கி விடுகிறார். இது அங்கு இருக்கும் சிலருக்கு பிடிக்கவில்லை. பொம்மனாட்டிகள் ஆசிரமத்தில் தங்கினால், ஆச்சாரம் கெட்டுவிடுமே என சஞ்சலமடைந்தனர். (சிறு வயதில், என் ஆத்தாவிடம்- என் அம்மாவின் அம்மா- கதைக் கேட்கும் போது அவர் பெண்களை "பொம்மனாட்டிகள்" என்றுதான் குறிப்பிடுவார். காரணம், அந்த காலத்தில் பெண்களை - பொம்மைகள் போன்று ஆட்டிப்படைப்பார்களாம். அதனால்தான் "பொம்மனாட்டிகள்")
அவர்கள் இரமணரை அணுகி, "ஆசிரமத்தில் பொம்மனாட்டிகள் தங்க கூடாது என்பது விதி. ஆச்சாரம் கெட்டுவிடும். உங்கள் அம்மா இங்கே இருக்கக்கூடாது" என வலியுறுத்தினர்.
மகான் "அப்படியா?" எனக் கேட்டுக்கொண்டார். பிறகு, எழுந்து சென்று, தனது வயதான தாயின் கையைப் பற்றி, "வாம்மா! போகலாம்" என்று ஆசிரமத்தை விட்டு வெளியேறி, மலையில் கீழே இறக்கிச் சென்றார்.
ஆச்சாரவாதிகள், இரமணரின் இந்த செய்கையை எதிர்ப்பார்க்கவில்லை. மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர். தெய்வம் வெளியேறி விட்டால், கோவிலுக்கு என்ன மதிப்பு? தங்கள் தவறினை அறிந்து, ஓடிச்சென்று மகானிடம் மன்னிப்பு கோரினர். அவர் தன் தாயுடன் வந்து தங்குமாறு வேண்டினர். இரமணர் தன் தாயுடன் ஆசிரமத்திற்கு திரும்பினார். ஞானிகளை, இவ்வுலகின் சிறுமைகள் தீண்டுவதில்லை.
இத்துடன் இப்பதிவை முடித்துவிட நினைத்தேன். ஆனால், அம்மாவின் கையைப் பற்றி அழைத்து செல்லும் இளைஞனின் சித்திரம், என்னை அதிகம் பாதித்தது. என் அம்மா ஆசிரியராகப் பணியாற்றியவர். அவர் பணிபுரிந்த பள்ளியில் ஐந்தாவது வரை படித்தேன். என் அம்மாவுடன்தான் பள்ளிக்கு போவேன். அம்மாவின் கையைப் பிடித்துக் கொண்டு, அவரின் வேகநடைக்கு சமமாக ஓடுவேன். சாலையைக் கடக்கும் போது என் அம்மாவின் கை, என் கையை இறுகப் பற்றிக் கொள்ளும். பாதுகாப்பாக, மறுப்புறம் அழைத்து செல்வார். காலம் ஓடியது. சிறுவன் இளைஞன் ஆனான். ஒரு முறை ஊருக்கு போவதற்காக என் அம்மாவுடன் சென்ட்ரல் ரயில் நிலையம், போனேன். மதிய நேரம். வாகனங்கள் சீறிப்பறக்கும் வால்டாக்ஸ் சாலையைக் கடப்பதற்காக, ஓரமாக நின்றிருந்தோம். வாகனங்கள் ஓய்ந்து, சாலையைக் கடக்க யத்தனிக்கும்போது, தீடீரென என் அம்மாவின் கை, சிறு நடுக்கத்துடன் என் கையைப் பற்றியது. என் அம்மாவை கரம் பற்றி பத்திரமாக அழைத்து சென்றேன். காலம் மாயாஜாலம் புரிந்தது. சிறுவன் இளைஞனாகவும், அம்மா சிறுமியாகவும் மாறிப்போனர்கள். என் அம்மாவின் கையைத் தொட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டதை, அப்போதுதான் நினைவுக்கு வந்தது. ரயிலில் ஏறி, இருக்கையில் அமரும் வரை, என் அம்மாவின் கரத்தைப் பற்றிக் கொண்டிருந்தேன்.
சு.இரவிச்சந்திரன்

No comments: