bluehost

Wednesday, February 19, 2020

அரவிந்த் கெஜ்ரிவால் - Political Anarchist

கெஜ்ரிவால் மூன்றாவது முறையாக டெல்லி முதல்வராக பதவியேற்று உள்ளார். கெஜ்ரிவாலின் வாழ்க்கை பயணம் நமக்கு உணர்த்துவது "பெரிதினும் பெரிது கேள்" எனும் பாரதியாரின் கூற்றைதான். வெற்றியாளர்கள் எப்போதும் இப்படிதான் சிந்திப்பார்கள். ஐ.ஐ.டி.யில் படிப்பு, பிறகு டாடா ஸ்டீல் நிறுவனத்தில் வேலை, பாதுகாப்பான வாழ்க்கை - இந்த மத்திய தர வர்க்க மனநிலையில் அவர் வாழ்ந்து இருக்கலாம். ஆனால் அவர் மக்களுக்கு பணிபுரிவதற்காக, சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி, இந்திய வருமான வரித்துறையில் சேர்ந்தார். பலரும் கனவு காணும் நல்ல சம்பளத்தில், அரசு உயர் பதவி. அத்துடன் அவர் தேங்கி இருக்கலாம். ஆனால் அதனை விட்டு விலகி முழுநேர சமூக பணிக்கு வந்தார்.
ஊழலுக்கு எதிரான தனது போராட்டத்தை தொடங்கினார். தகவல் உரிமைச் சட்டம் நடைமுறைக்கு வர அவரும் அவரது குழுவினரும் பெரும் பங்காற்றினர். அன்னா ஹசாரேவுடன் சேர்த்து "லோக்பால் மசோதா" கொண்டு வரவேண்டும் என்று போராடினார். அரசியல் அதிகாரம் இல்லாமல் பெரிதாக எதையும் சாதிக்க முடியாது என உணர்ந்து, "ஆம் ஆத்மி" என்ற அரசியல் கட்சி ஒன்றை தொடங்கினார். அவருடைய அரசியல் குரு(Mentor) அன்னா ஹசாரேவே, கெஜ்ரிவாலின் அரசியல் பிரவேசத்தை ஆதரிக்கவில்லை. பெரும் புகழுடன், செல்வாக்குடனும் தனிக்கட்சி ஆரம்பித்த பலர் காணாமல் போயினர். ஆனால் ஊழலுக்கு எதிரான மனநிலை கொண்ட இளைஞர்கள் பலர் கெஜ்ரிவாலை ஆதரித்தனர். அவருக்காக தன்னிச்சையாக நாடு முழுவதும் பிரச்சாரம் செய்தனர். அது புதிய ஒரு அரசியல் இயக்கமாக உருவெடுத்தது.
பல முன்னணி எழுத்தாளர்கள், அறிவு ஜீவிகள் அவருக்கு ஆதரவு கரம் நீட்டினார். தமிழ்நாட்டிலும் எழுத்தாளர் ஞாநி போன்றவர்கள் அதனை ஆதரித்தனர். ஆனால், ஆம் ஆத்மி தமிழ் நாட்டில் வெற்றி பெறவில்லை. ஏனெனில் தமிழ் மக்கள் ஊழலை, வாழ்க்கையின் ஒரு அங்கமாக ஏற்றுக்கொண்டனர். அவர்களுடைய அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படாத வரை, பல்லாயிரம் கோடி ஊழல் புரிந்தவர்களை அவர்கள் பொருட்படுத்துவதில்லை. அதனால்தான், ஊழல் புரிந்தவர்களை மீண்டும் மீண்டும் ஆட்சியில் அமரவைத்தனர்.
ஆனால், ஆம் ஆத்மி கட்சி நாடே வியக்கும் வகையில் 2013 ஆம் ஆண்டு டெல்லி தேர்தலில், வெற்றி பெற்று, பா.ஜ.க.வுக்கு அடுத்து 2ஆம் இடத்தை பிடித்தது. கெஜ்ரிவால், அப்போதைய டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித்தை வீழ்த்தி, கணிசமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைத்தார். ஆனால், சில மாதங்களிலேயே, லோக்பால் மசோதாவை தாக்கல் செய்ய முடியவில்லை எனக் கூறி ராஜினாமா செய்தார். இது மக்களிடையே கெஜ்ரிவாலின் மீது அவநம்பிக்கையையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியது.
2014 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் மோடிக்கு எதிராக வாரணாசி தொகுதியில் போட்டியிட்டு, படுதோல்வி அடைந்தார். அத்துடன் கெஜ்ரிவாலின் அரசியல் வாழ்க்கை அஸ்தமித்துவிட்டது என பலர் நினைத்தனர். அவர் கட்சியிலிருந்து நெருங்கிய சகாக்கள் பலர் விலகினர். ஆனால், கெஜ்ரிவால் நம்பிக்கை இழக்கவில்லை. டெல்லி சட்டசபை தேர்தலில் எப்படியும் வெற்றி பெறுவோம் என் தன்கட்சியினருக்கு நம்பிக்கை அளித்தார்.
ஓர் ஆண்டுக் கால, ஆளுநர் ஆட்சி முடிந்து 2015ல் நடந்த தேர்தலில், பெரும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தார். அப்போது அவரை எதிர்த்து பா.ஜ.க சார்பில் போட்டியிட்ட, அவருடைய முன்னாள் சக போராளியான கிரண் பேடி, பெரும் தோல்வியை தழுவினார். இது போன்று பெரும் வெற்றி பெற்று, மக்களின் நம்பிக்கையை நிறைவேற்ற இயலாமல் அடுத்த தேர்தலில் தோல்வியடைந்தவர்கள் ஏராளம். ஆனால், கெஜ்ரிவால் பல சாதனைகளை புரிந்து, மக்களின் நன்மதிப்பை பெற்று, மீண்டும் முதல்வர் ஆனார். எந்த ஒரு பின்புலமும் இல்லாமல், சாமானியனாக கெஜ்ரிவால் வெற்றி பெற்று, மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றியது - பெரும் சாதனை ஆகும். சென்ற முறை முதல்வராக பதவி ஏற்ற போது, பொது மக்களுடன் மெட்ரோ ரயிலில் பயணித்து, பதவி ஏற்றுக்கொண்டார். இந்த முறை, ஐம்பது துப்பரவு தொழிலாளிகளை, சிறப்பு விருந்தினர்களாக தன் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள வைத்துள்ளார்.
2014ஆம் ஆண்டு செய்தியாளர்களிடம், கெஜ்ரிவால் தன்னை ஒரு அரசியல் கலககாரர் (Political Anarchist) என அறிவித்துக் கொண்டார். வழக்கமான அரசியல் நடைமுறைகளுக்கு மாறாக புதிதாய் அரசியல் செய்வதையே அப்படி குறிப்பிட்டார். தமிழ் நாட்டிலும் ஒரு கலககாரர் இருந்தார். அவர் பெயரைக் கேட்டாலே சங்கிகள் அலறுவர். அவர்தான் மக்களை அடிமைபடுத்தும் கடவுள், மதம், சாதி, மொழி, இனம், குடும்பம் அமைப்புக்களை உடைத்து அதகளம் செய்த பெரியார். அதே போன்று வடக்கில் இன்னோருவர் இருந்தார். அவர்தான் "செக்ஸ் சாமியார்" என பரவலாக அறியப்பட்ட பகவான் ரஜ்னீஸ், பின்னர் ஓஷோ. கடவுள், மதங்கள் பேரால் இருந்த அத்தனை அடக்குமுறைகளையும் உடைத்து, மக்கள் குற்றவுணர்வு இன்றி ஆனந்தமாக வாழ வழிக்காட்டியவர். ஆன்மீக புரட்சியாளர் ஓஷோ.
இன்று நாட்டுக்கு தேவை - இம்மாதிரியான கலககாரர்களே.
சு.இரவிச்சந்திரன்

No comments: