bluehost

Sunday, November 8, 2020

ஓஷோவும், நானும்






எனக்கு பத்து வயது இருக்கும்பொழுது, ராணி வார இதழில், ஓஷோவை பற்றிய கட்டுரை ஒன்றை படித்தேன்.  ஓஷோவும், ஒரு பெண்ணும் நிர்வாணமாக இருக்கும் புகைப்படம் அதில் இருந்தது.  அந்தரங்கப் பகுதிகள் கருப்பு மசி பூசி மறைக்கப்பட்டிருந்தன. ஓஷோ எனக்கு அறிமுகமானது இப்படிதான். 1992ல் ரஜினிகாந்த்தும், வினோத் கன்னாவும் ஒரு விழாவில் ஓஷோவின் புத்தகத்தை வெளியிட்டனர். எனக்கு "ஏன் அந்த செக்ஸ் சாமியாரின் புத்தகத்தை  இவர்கள் வெளியிடுகிறார்கள்" என்று அதிர்ச்சியாக இருந்தது.


1994ல் நடிகரும், ஒழுக்கவாதியான சிவகுமார், ஓஷோ எழுதிய "புல் தானாக வளர்கின்றது" என்ற புத்தகத்தை பற்றி ஆனந்தவிகடனில் எழுதி இருந்தார். அது என்னை மிகவும் ஈர்த்தது. நான் அந்த புத்தகத்தை வாங்கிப் படித்தேன். ஓஷோ நான் அதுவரை வைத்திருந்த அத்தனை முட்டாள்தனங்களையும் கருத்துக்களையும் அடித்து உடைத்தார். இப்படி கூட சிந்திக்க முடியுமா? என்று யாருமே சிந்தித்திராத புதிய கோணங்களில் அவருடைய சிந்தனைகள் இருந்தன. அவை எனக்குள் பல புதிய கதவுகளைத் திறந்தன.


ஓஷோ புத்தமதத்தின் ஞான மரபான ஜென் தத்துவத்தை பற்றி அதிகம் பேசுகிறார். அவருடைய தத்துவம் மிக எளிமையானது. "இங்கே, இப்பொழுது,(Now and Here) நிகழ்காலத்தில் வாழுங்கள்" என்பதே அது. "உலகத்தில் புனிதமானது என்பது எதுவும் கிடையாது. இழிவானது என்று எதுவும் கிடையாது. நல்லது, கெட்டது எல்லாம் நம் மனதின் தீர்மானங்களே. எதையும், யாரையும் பின்பற்றாதீர்கள். பின்பற்றுபவன் - ஒரு அடிமை. எந்த ஒரு கருத்தியல்குள்ளும் சிக்கிக் கொள்ளாதீர்கள்" என்கிறார்.


  • தியானத்தைப் பற்றி ஓஷோ:

ஒரு செயலை செய்யும் போது, செய்பவன்(Subject), செய்யப்படும் பொருள்(Object) இரண்டுமே இருக்கக் கூடாது. செயல்(Action) மட்டுமே இருக்க வேண்டும். அதுதான் தியானம் என்கிறார். ஒரு இசைக்கருவியை நீங்கள் இசைக்கும்போது, இசைப்பவன், இசைக்கருவி இரண்டும் இருக்கக்கூடாது. இசை மட்டுமே இருக்க வேண்டும். இதனை நீங்கள் மைக்கேல் ஜாக்சன் நடனமாடும்போது காணலாம். ஜாக்சன் நடனமாடும்போது, ஆரம்பத்தில் அவர்தான் நடனமாடுவார். சிறிது நேரத்தில் நடனம் அவரை ஆக்கிரமித்து, ஆட்டிவைக்க ஆரம்பித்துவிடும். ஒரு கட்டத்தில் அங்கு நடனம் மட்டுமே இருக்கும். ஜாக்சன் மறைந்துவிடுவார். இந்த கரைதலையே, ஓஷோ தியானம் என்று சொல்கிறார்.


  • காமத்தை பற்றி ஓஷோ: 

காமத்தை பற்றி ஓஷோ எழுதிய புத்தகங்கள் நான்கு அல்லது ஐந்துதான் இருக்கும் ஆனால் அவரை செக்ஸ் சாமியார் என்று வர்ணித்து பத்திரிகைகள் எழுதின. "காமம் ஒரு குற்றமல்ல. பாவம் அல்ல. ஞானத்தை அடைய அது ஒரு பெரும் தடையுமில்லை. ஞானத்தை அடைய அதுவும் ஒரு வழி" என்று சுட்டிக்காட்டுகிறார். உடல் இன்பத்தை நமது பண்பாடு கொண்டாடியது. அந்நிய மதங்கள்தான் அதனை ஒரு பெரிய பாவம் என்று கூறி கண்டித்தன. "எதை அடக்கி வைக்கின்றோமோ, அது ஒரு காலகட்டத்தில் வெடித்து கிளம்புகிறது" என்று ஓஷோ கூறுகிறார். இன்று நிர்பயா போன்ற நிகழ்வுகள் நடப்பதற்கு இந்த அடக்குதல்தான் காரணம். "காமத்தின் மூலமாகதான் சிருஷ்டி நடைபெறுகிறது. அது ஒரு பெரிய குற்றச் செயல் அல்ல. காமம் இயல்பான ஒன்று. அதனைக் கடந்துதான் ஞானத்தை அடைய முடியும். மறுத்து அல்ல"  என்று ஓஷோ கூறுகிறார். மேலும் இதைப்பற்றி அறிந்து கொள்ள ஓஷோ எழுதிய "காமத்திலிருந்து கடவுளுக்கு" என்ற நூலைப் படிக்கவும்.


  • போலி சாமியார்கள் பற்றி ஓஷோ:

"நீ எதைத் தேடுகிறாயோ அதையே அடைகிறாய். நீ பேராசை கொண்டவனாக இருந்தால், ஏமாற்றுக்காரர்களிடம் தஞ்சம் அடைவாய். ஞானத்தேடல் கொண்டவனாய் இருந்தால், உண்மையான ஞானியை சென்றடைவாய். சிஷ்யன் குருவை தேடுவது என்பது அகந்தை. குருவே சிஷ்யனை தேடுகிறார்" என்கிறார்.


  • துறவு பற்றி ஓஷோ:

காவி அணிவதோ, தலையை மழிப்பதோ, முடியை வளர்ப்பதோ, தாடி வளர்ப்பதோ, தலைக்கீழாக நிற்பதோ, துறவு அல்ல. மனதை துறத்தலேயே என்கிறார். 


  • செல்வந்தர்களின் குரு:

அவர் தன்னை செல்வந்தர்களின் குரு என்று அழைத்துக்கொண்டார். ஆன்மீகம் என்பது வறுமையை கொண்டாடுவது அல்ல. தன்னை வருத்திக் கொள்வது அல்ல. வாழ்க்கையை கொண்டாடுவது. ஒவ்வொரு வினாடியும் வாழ்க்கையை கொண்டாடுவதே தியானம் என்கிறார். 


ஓஷோவின் நூல்கள், படிப்பதற்கு மட்டுமல்ல பரிசோதித்துப் பார்ப்பதற்கும். ஓஷோ - ஒரு வழிகாட்டி. உங்கள் முன்பு இரண்டு வழிகள்(Choices) உள்ளன. ஒன்று இவனெல்லாம் ஒரு சாமியார் என்று கேலி பேசி, அவர் மீது மலத்தை எறிந்துவிட்டு, தன்னுடைய புத்திசாலித்தனத்தை குறித்து குதூகலம் கொள்வது. இரண்டாவது அவர் காட்டிய வழியில், நம் பயணத்தைத் தொடங்குவது. அது நெடுந்தொலைவு பயணம். பல பிறவிகள் கடந்து செல்லும் பாதை. நாம் ஓஷோவிடம் இருந்துதொடங்குவோம்.



மனிதன் ஒரு வித்தியாசமான பிறவி. இறந்துபோன குருவை கொண்டாடுகிறான். வாழ்கின்ற குருவை கொல்லத் துடிக்கிறான்.
-ஓஷோ

புத்தர் கதை 2



சில ஆண்டுகளுக்கு முன்பு புத்தரைப் பற்றிய ஒரு பதிவு சமூக வலைதளங்களில் சுற்றி வந்தது, புத்தர் தனது இளம் மனைவியையும் பச்சிளம் குழந்தையையும் கைவிட்டுவிட்டு காட்டுக்கு ஓடிப் போன ஒரு கொடுமைக்காரர், கோழை, சுயநலவாதி என்று. நானும் புத்தரைப் பற்றி பல விஷயங்களை படித்து இருக்கின்றேன். ஆனால் இந்த மாதிரி ஒரு கோணத்தில் நான் யோசிக்கவில்லை. புத்தரின் மனைவி யசோதரையின் துன்பம் மிகக் கொடியது. இருந்தாலும் இவர்கள் புத்தரை ஏன் குற்றவாளியாக ஆக்குகின்றனர். ஞானிகளை ஏன் இவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை? ஓஷோ, அதை விளக்குகிறார்.


புத்தர் ஞானத்தை அடைந்தவுடன் முதலில் தன் மனைவியை பார்க்கவே விரும்பினார். அதற்கு அவருடைய பிரதம சீடர் ஆனந்த் எதிர்ப்பு தெரிவித்தார். அவர் புத்தரின் பெரியப்பா மகன். அண்ணன் முறையும் கூட. "நீ துறவி. எப்படி மனைவியை பற்றி நினைக்கலாம்?" என்று கேட்கிறார். ஆனால் புத்தர் "யசோதரை எனக்கு மிகப்பெரிய உதவி செய்திருக்கிறாள். அவளுக்கு நான் மிகவும் கடமைப்பட்டு உள்ளேன். எனக்கு ஏற்பட்ட இந்த அனுபவத்தை அவளுடன் நிச்சயம் பகிர்ந்து கொள்ள வேண்டும்" என்றார். தன் மனைவியை காண 12 ஆண்டுகள் கழித்து அரண்மனைக்குப் போகிறார்.


புத்தரை பார்த்தவுடன் அவர் மனைவி அத்தனை ஆண்டுகள் அடக்கி வைத்த கோபத்தையும் துக்கத்தையும் கொட்டி தீர்க்கிறாள். அவர் அமைதியாக கேட்கிறார். "என் மீது உங்களுக்கு அன்பு இல்லையா? என்னையும், குழந்தையையும் தவிக்கவிட்டு பிரிந்து செல்ல எப்படி உங்களுக்கு மனம் வந்தது?" என்று அவள் கேட்கிறாள்.


"என்னிடம் இருந்து தப்பிச் செல்லவே உன்னைப் பிரிந்தேன். உன் மீது உள்ள அன்பினால்தான் உன்னைக் காண மீண்டும் வந்தேன். உன்னை நான் இப்போதும் காதலிக்கிறேன். ஆனால் முன்பிருந்த காதல் வேறு. இப்போதிருக்கும் காதல் வேறு" என்கிறார்.


அவர் மனைவி "நீங்கள் என்னை பிரிந்து சென்றதை பற்றி எனக்கு கோபம் இல்லை. ஏன் என்னிடம் சொல்லாமல் போனீர்கள். அதுதான் எனக்கு மிகுந்த துன்பத்தை தருகிறது. என் மீது உங்களுக்கு நம்பிக்கை இல்லையா? திரும்பி வருவீர்களா என்று தெரியாமல் போர்க்களத்திற்கு உங்களை வழி அனுப்பி வைத்தவள் நான். நீங்கள் சத்தியத்தை தேடி போகிறீர்கள் என்றால் நான் எப்படி தடுப்பேன்?" என்று கேட்கிறாள்.


புத்தர் அதற்கு "என்னை மன்னித்து விடு. நீ தடுக்க மாட்டாய் என்று தெரியும். எனக்குதான் உன்னிடம் விடைபெற்று போகும் தைரியம் இல்லை" என்கிறார்.


யசோதரா "நீங்கள் எங்களைப் பிரிந்து சென்று எதைக்கண்டடைந்தீர்கள்? அதை இங்கேயே நீங்கள் அடைய முடியாதா?" என்று கேட்கிறாள்.


புத்தர் "நான் அப்பொழுது அறியாமையில் இருந்தேன். காட்டில் கண்டடைந்ததை, சந்தடி நிறைந்த சந்தையிலும் அடையலாம். எங்கும் ஞானத்தை அடையலாம். ஏனென்றால் உண்மை எங்கும் நிறைந்துள்ளது. அது அப்போது எனக்கு தெரியாது.


நடந்த தவறுகளை மறந்து விடு. என்னை உற்றுப் பார். எனக்குள் ஒரு அற்புதம் நிகழ்ந்திருக்கிறது. அதனை உன்னிடம் பகிர்ந்து கொள்ளவே வந்தேன்" என்கிறார்.  


யசோதரா அவரைப் பார்க்கிறாள். இது பழைய சித்தார்த்தன் அல்ல.  இந்த மனிதருக்குள் ஏதோ ஒன்று மலர்ந்து இருக்கின்றது. அவரை சுற்றி ஒளிவட்டம் வீசுகிறது. பன்னிரெண்டு ஆண்டுகள் அவளின் நெஞ்சில் கனன்ற கனல் அணைந்து மனதில் அமைதி சூழ்கிறது. யசோதரா, புத்தரின் பாதம் பணிகிறாள். புத்தர் அவளுக்கு தீட்சை அளிக்கிறார்.


அவளின் கண்ணீர் பாதங்களில் பட்டு புத்தர் மேலும் புனிதராகிறார்.


புத்தர் கதை 1

 




இறவாத ஒன்றை, எனக்கு போதியுங்கள்

Teach me, which will not die


(எல்லோரும் சிறு வயதில் படித்தக் கதை; ஓஷோ முற்றும் வேறு கோணத்தில் சொல்கிறார். வார்த்தைகள் மட்டும் என்னுடையவை)


ஒரு இளம் தாய். அவளுடைய குழந்தை பாம்பு கடித்து இறந்து விட்டது. சில நாட்களுக்கு முன்புதான் அவளுடைய கணவனும் மரணம் அடைந்தான். அவளின் ஒரே துணை. அக்குழத்தைதான். அந்தப் பெண் கதறி துடிக்கிறாள். கண்டவர் நெஞ்சங்கள் கலங்குகின்றன. அப்போது ஒருவர் இந்த ஊரின் எல்லையில், மரத்தடியில் "ஒரு ஞானி அமர்ந்து இருக்கிறார். அவரிடம் சென்று கேள். அவர் உன் குழந்தையை உயிர்பிழைக்க வைக்கலாம்" என்கிறார். அவள் குழந்தையை தூக்கிக் கொண்டு ஓடுகிறாள்.


புத்தர் மரத்தடியில் அமர்ந்திருக்கிறார். அமைதியின் உருவம். அந்தப் பெண் அவரின் முன்பு கைகளில் குழந்தையை ஏந்தி, பிழைக்க வைக்குமாறு அழுகிறாள். அந்த பச்சிளம் குழந்தையின் முகத்தை கண்ட புத்தரின் மனம் ஒரு கணம் தடுமாறுகிறது. சட்டென்று புத்தர் மறைந்து சித்தார்த்தன் தோன்றுகிறார். அரண்மனையை விட்டு வெளியேறிய அந்த இரவில், படுக்கையில் தன் மனைவியுடன் உறங்கிக்கொண்டிருந்த தன் மகன் ராகுலனின் பச்சிளம் முகம் அவரின் நினைவுக்கு வந்தது. அவரிடமிருந்து பெருமூச்சு ஒன்று வெளிப்படுகிறது. 


"அம்மா! உன்னுடைய துயரம் மிகக் கொடியது. யாராலும் தாங்க முடியாதது." என்கிறார்.


அப்பெண் "சுவாமி! தயவுசெய்து என் குழந்தையை பிழைக்க வையுங்கள்"  என்று கெஞ்சுகிறாள்.


புத்தர், கண்கள் மூடி சிறிது நேரம் அமைதியாக இருக்கிறார். "யார் வீட்டிலாவது ஒரு படி எள் வாங்கி வா. உன் குழந்தையை உயிர் பிழைக்க செய்கிறேன்" என்கிறார். "ஒரு படி எள்தானே. இப்போதே வாங்கி வருகிறேன்" என்று அவள் ஓடத் தயாராகிறாள்.  புத்தர் "ஆனால், ஒரு நிபந்தனை - மரணமே நிகழாத வீட்டில் இருந்து வாங்கி வா" என்று முடிக்கிறார்.


அவள், ஒவ்வொரு வீட்டிலும் போய் இறைஞ்சுகிறாள். எல்லோரும் அவளுக்கு உதவ விரும்புகின்றனர். ஆனால், மரணம் நிகழாத வீடு என்று எதுவும் இல்லை. மாலையில் அவள் புத்தரைத் தேடி வருகிறாள். இப்போது அவள் தெளிந்திருந்தாள். கைகளில் குழந்தை இல்லை. தகனம் செய்திருந்தாள். "சுவாமி, மரணம் நிகழாத வீடு எதுவும் இல்லை. பிறந்தவர் அனைவரும் ஒரு நாள் இறப்பர். மரணம் தவிர்க்க இயலாதது. இயற்கையானது என்பதை அறிந்துக் கொண்டேன். அதனால், என்றும் இறவாத ஒன்றை எனக்கு போதியுங்கள் (Teach me which will not die)" என்று அவர் பாதம் பணிந்து சிஷ்யை ஆகிறாள்.


இத்துடன் ஓஷோ முடித்திருந்தால், நான் இந்த பதிவை எழுத வேண்டிய அவசியம் இருந்திருக்காது. அவர் தொடர்கிறார் "அந்தப் பெண் இயேசுவிடம் சென்றிருந்தால் நிச்சயம் அவர் குழந்தையை உயிர்த்தெழ செய்திருப்பார். அது அவருடைய அணுகுமுறை. இருவரும் ஞானிகள்தான். ஆனால் புத்தர் வேறு, இயேசு வேறு" என்று முடிக்கிறார்.


புத்தர் ஏன் மரணம் இயற்கையானது என்று சொன்னார். இயேசு ஏன்  மரித்தவரை உயிர்த்தெழச் செய்தார். இது நமது சிந்தனைக்கு.


சு.இரவிச்சந்திரன்