bluehost

Sunday, March 1, 2020

அறிஞர் அண்ணா

கி.ஆ.பெ.விசுவநாதம் எழுதியுள்ள, 'எனது நண்பர்கள்' நுாலிலிருந்து:

இந்திய பேரரசில் வர்த்தக அமைச்சராக இருந்தவர் மற்றும் பல உயர் பதவிகளை, கல்வியாலும், அறிவாலும் பெருமைக்குரியதாக மாற்றியவர், டாக்டர் சர்.ஏ.ராமசாமி முதலியார். ஆங்கிலத்தில் சிறப்பாக பேசும் திறமையுள்ள இவர், ஆரம்பத்தில், ஜஸ்டிஸ் கட்சியில் இருந்தார்.ஒருமுறை, திருச்சி, ஜஸ்டிஸ் கட்சி மாநாட்டில் பேச அழைக்கப்பட்டிருந்தார். அவரின் ஆங்கில பேச்சை மொழி பெயர்க்க ஒருவர் தேவைப்பட்டார்.

நான், பலரை கேட்டேன்; மறுத்து விட்டனர். இந்நிலையில், 'நான் மொழி பெயர்க்கிறேன்...' என, முன் வந்தார், ஒரு கல்லுாரி மாணவர்.
ஊரும், பேரும் கேட்டேன். 'காஞ்சிபுரம், அண்ணாதுரை' என்று சொன்னார்.
'ஒரு பெரிய அரசியல்வாதியின் பேச்சை, பள்ளிக்கூடத்து பிள்ளைகளை விட்டு மொழி பெயர்ப்பது நல்லதல்ல...' என்று, எனக்கு தோன்றியது. நான் ஒப்பவில்லை. ஆனால், வேறு வழியில்லாமல் போகவே, அப்பையனை விட்டே மொழி பெயர்க்க சொன்னேன்.

டாக்டர் ஏ.ராமசாமி முதலியாரின் பேச்சு, கொட்டகையை அதிர வைத்தது; மொழி பெயர்ப்பும், அதற்கு இணையாக இருந்தது. ஒரு பெரிய நல்ல காரியத்தை செய்து விட்டதாக எண்ணி இறுமாப்புடன், ஏ.ராமசாமி முதலியாரை அணுகி, 'பையனின் மொழி பெயர்ப்பு எப்படி...' என்று கேட்டேன். அதற்கு அவர், 'பையன், நன்றாக தான் மொழி பெயர்த்தான். மொழி பெயர்ப்பில் ஆங்காங்கே சிறிது, 'சன்னப் பொடி (மூக்குப் பொடி)யும் கலந்திருந்தது...' என்று, மகிழ்ச்சியோடு கூறினார்.

காலம் வேகமாக ஓடியது. 1968ல், சென்னையில் நடந்த இரண்டாவது உலக தமிழ் மாநாட்டில், துணை தலைவராக பணிபுரிந்தேன். அப்போது, மவுண்ட்ரோடில்,
சி.என்.அண்ணாதுரையின் சிலையை வைப்பது என்ற முடிவுக்கு வந்தோம். அதை திறந்து வைக்க, ஏ.ராமசாமி முதலியார், மவுண்ட்ரோடுக்கு வந்தபோது, துாரத்தில் இருந்த என்னை, கை தட்டி கூப்பிட்டார். 'திருச்சி, ஜஸ்டிஸ் கட்சி மாநாட்டில், அண்ணாதுரை மொழி பெயர்த்தபோது, அப்பையன், பின்னாளில், நம் நாட்டிற்கு, தலைமை அமைச்சராக வருவார் என்றோ, அவருடைய சிலையை நாம் இருவரும் திறந்து வைக்கப் போகிறோம் என்றோ நினைத்தோமா...' என, கூறி மகிழ்ந்தார்.

திறமையிருந்தால், அது உச்சிக்கு அழைத்து போய் நிறுத்தும் என்பதற்கு, அண்ணாதுரை சிறந்த உதாரணம்.

நன்றி : தினமலர் - வாரமலர் 


No comments: