2003 ஆம் ஆண்டு உலக வானியலாளர் மாநாடு ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடந்தது. அந்த மாநாட்டின் இறுதியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் 2005-ஆம் ஆண்டு உலக வானியல் ஒருங்கமைப்பும் (International Astronomical Union) யுனெஸ்கோ (UNESCO) இந்த ஆண்டினை உலக வானியல் ஆண்டாக அறிவித்திருக்கிறது. (உங்களில் பலருக்கு 2005 ஆம் ஆண்டு உலக இயற்பியல் ஆண்டாகக் கொண்டாடப்பட்டது நினைவிருக்கலாம்).
வானியல் ஆண்டு? ஏன்?
2009 ஆம் ஆண்டு வானியல் ஆண்டாகக் கொண்டாடப்படுவதன் அடிப்படை நோக்கம் சராசரிப் பொதுமக்களுக்கு வானத்தைக் கூர்ந்து நோக்கி இந்தப் பேரண்டத்தில் தம் இருப்பிடத்தை அறிய உதவுவதும், அதன் மூலம் கண்டுபிடித்தலின் அடிப்படை ஆனந்ததையும் ஆச்சரிய அனுபவத்தையும் துய்க்க உதவுவதும் ஆகும். வானியல் ஆய்வுகள் சராசரி மக்களின் அன்றாட வாழ்வில் செலுத்தும் பங்கை அறியத் தருவதும் இதன் நோக்கமாகும். அடிப்படை அறிவியல் தேட்டம் நம் அன்றாட வாழ்வை மேம்படுத்தும் விதத்தையும் அதன் துணைகொண்டு அமைதி நிறைந்த, சமச்சீர் உலகை அடையும் உன்னத நோக்கத்தையும் மறுவலியுறுத்த இந்த ஆண்டிற்கான கொண்டாட்டங்கள் உதவும் என்று நம்பலாம்.
2009-ஆம் ஆண்டு முழுவதும் உலகின் அனைத்து நாடுகளிலும் வானியல் சார்ந்த கொண்டாட்டங்கள் ஒழுங்கு செய்யப்படுகின்றன. ஒவ்வொரு நாட்டிலும் இந்த கொண்டாட்டங்களை முன்னின்று நடத்த அறிஞர் குழுக்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் ஏற்கனவே இந்தக் குழுக்கள் செயல்களில் இறங்கிவிட்டன. பல இடங்களில் வானியல் குறித்த செய்விளக்கங்கள், உரைகள், கருத்தரங்கங்கள், பள்ளிகளில் சிறார்களுக்கான வானியல் விளையாட்டுகள் என்று ஏற்கனவே களைகட்டத் தொடங்கிவிட்டது.
இலக்குகள்
1. அறிவியல் ஆய்வு முடிவுகளைப் பலரும் புரிந்துகொள்ளும் முறையில் பரப்புவதந் மூலம் அடிப்படை அறிவியல், குறிப்பாக வானியல், குறித்த பிரக்ஞையை பொதுமக்களிடையே வளர்த்தல். தீர்க்கமான சிந்தனைகள் எப்படி இந்த அற்புத அடிப்படைப் புரிதல்களை நமக்குத் தருகின்றன என்று புரியவைத்தல்.
2. வானியல் குறித்த அற்புதங்களை விளக்குவதன் மூலமும், வானத்தை உற்றுநோக்கல் மூலம் அடையும் உன்னத உணர்வை முன்வைத்தும் அடிப்படை அறிவியல் தரும் பொதுப் புரிதல்களை பொதுமக்களிடையே விளக்குதல்
3. வளர்ந்து வரும் நாடுகளின் வானியல் ஆராய்ச்சிகளைப் பன்னாட்டு அறிவியல் கூட்டு நடவடிக்கைகளின் மூலம் பலப்படுத்தல்
4. பள்ளிகளின் முறைசார்ந்த மற்றும் முறைசாரா அறிவியல் கல்வியை மேம்படுத்த உதவுதல்; கோளரங்கங்கள் அருங்காட்சியங்கள் வழியே அறிவியல் கல்விக்கு உதவுதல்.
5. தற்கால அறிவியல் மற்றும் அறிவியலாளர்கள் குறித்த முறையான பிம்பங்களை மாணவர்களிடையே வளர்த்தல், அதன் வழியே அறிவியல் கல்வியிலும் அறிவியலிலும் ஆர்வத்தைப் பெருக்குதல், வாழும்வரை அறிதலின் ஆனந்தத்தை விதைத்தல்.
6. பொழுதுபோக்கு வானியலாளர்கள், கல்வியாளர்கள், அறிவியலாளர்கள், தகவல் தொடர்பாளர்களுக்கிடையே இருக்கும் பரஸ்பர நெருக்கத்தை மேம்படுத்தல், புதிய தொடர்புகளை உருவாக்குதல். உள்ளூர், பிராந்திய, தேசிய, பன்னாட்டு மட்டங்களில் புதிய வலையமைப்புகளை உருவாக்குதல்
7. அறிவியலில் எல்லா மட்டங்களிலும் இருபாலர்களின் பங்களிப்புகளை சமனாக்குதல்; வாய்ப்பற்ற சிறுபான்மையினருக்கு அறிவியல் மற்றும் நுட்பத் துறைகளில் வாய்ப்புகளை உருவாக்குதல்
8. மாசற்ற, இருண்ட வானத்தின் முக்கியத்தையும், பாரம்பரிய, கலாச்சார வானியல் தலங்களின் முக்கியத்துவத்தையும் குறித்த விழிப்புணர்வை வளர்த்தல்.
2009 ஆம் ஆண்டின் முக்கியத்துவம்
வானியல் ஆண்டு ஏன் குறிப்பாக இந்த ஆண்டில் கொண்டாடப்பட வேண்டும்?
ஐக்கிய நாடுகள் அமைப்பின் யுனெஸ்கோ ஒவ்வொரு ஆண்டையும் ஒரு குறிப்பிட துறைசார்ந்த ஆண்டாக அறிவித்துக் கொண்டாடுகிறது. இவற்றின் நோக்கம் கல்வி மற்றும் கலாச்சாரத் துறைகளில் பரஸ்பர புரிந்துணர்வுகளை உருவாக்குவது, குறிப்பாக வளரும் நாடுகளுக்கிடையே கொண்டாடப்படும் துறையைச் சார்ந்த ஒத்துழைப்புகளை மேம்படுத்துவது. கொண்டாட்டங்களுக்குப் பிறகும் முன்னெடுக்கப்பட்ட திட்டங்களைத் தொடர்ந்து நடத்துவது, அதற்கான நிதித்திட்டங்களை உறுதி செய்வது யுனெஸ்கோவின் வழக்கம். எனவே கொண்டாட்டத்திற்காகத் தேர்தெடுக்கும் பொழுது அதன் முக்கியத்துவம் பெரிதும் ஆராயப்படுகிறது.
சரியாக 400 ஆண்டுகளுக்கு முன்னால் கலீலியோ தொலைநோக்கியின் உதவி கொண்டு வானத்தை ஆராய்ந்தார். அவருடைய உற்றுநோக்கல்கள் இந்தப் பிரபஞ்சத்தைக் குறித்த நம்முடைய தற்கால நவீன புரிந்தல்களின் முன்னோடி என அறியப்படுகிறது. அறிவியலும் கற்பனையும், கதைகளுமாக பிரிக்க முடியாமல் பிணைந்திருந்த பண்டைய வானியலிலிருந்து திரமான அறிவியல் கட்டமைப்புகள் மீதான நவின வானியல் கட்டியெழுப்பப்பட்டது. கலீலியோவின் அந்த அற்புதக் கண்டுபிடிப்பைக் கொண்டாடவும், நவீன வானியலை முன்னெடுத்துச் செல்லவும் 2009 ஆம் ஆண்டு உலக வானியல் ஆண்டாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. கலீலியோவின் தாயகமான இத்தாலி முன்னின்று இதற்கான தீர்மானத்தை ஐக்கிய நாடுகளில் முன்வைத்தது. விவாதங்களுக்குப் பிறகு ஐக்கிய நாடுகள் அமைப்பு முழுமனதாக அதை ஏற்றுக்கொண்டது.
தமிழில் இந்தக் கொண்ட்டாடங்களை முன்னின்று நடத்த ariviyal.info தளம் பல புதிய திட்டங்களை விரைவில் அறிவிக்கும்.
No comments:
Post a Comment